தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நிதி இல்லையா..! ஓய்வூதியர்கள் கேள்வி..? - மதுரை காமராஜர் பல்கலைகழக ஓய்வூதியர்கள் சங்கம்

pensioners association hunger strike: மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக, ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (அக்.17) நடைபெற்றது.

pensioners association hunger strike demanding Madurai Kamaraj University should pay the pension
மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:34 PM IST

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மதுரை:ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில், மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகம் முன்பு இன்று (அக்.17) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும், இந்தப் போராட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் செயலாளர் சுவாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதைத் தொடர்ந்து, சீனிவாசன் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்காக பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ஓய்வூதியம் முறையாக எங்களுக்கு வழங்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய ஓய்வூதியம் அக்டோபர் மாதம் 17-ஆம் தேதி ஆன பின்னரும் கூட இதுவரை வழங்கப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் நிதி இல்லை எனக் காரணம் சொல்லப்படுகிறது.

ஒரு காலத்தில் அதிக உபரி நிதியோடு இயங்கிய பல்கலைகழகம் இது. மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம், அழகப்பா பல்கலைகழகம், அன்னை தெரசா பல்கலைகழகம் போன்றவையெல்லாம் இன்றைக்கு காமராசர் பல்கலைகழகத்திலிருந்து பிரிந்துவிட்டன. அதனால் வருமானம் குறைந்துபோய்விட்டது. அதேபோன்று பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த கல்லூரிகள் பல தன்னாட்சி அந்தஸ்து பெற்று பிரிந்துவிட்டன.

அதேபோன்று அஞ்சல் வழிக் கல்வி ஒரு காலத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டித் தந்தது. ஆனால் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக எல்லைக்குள் அழகப்பா, அண்ணாமலை, மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அஞ்சல் வழி கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன. மாறாக, காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு மட்டும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டும்தான் அஞ்சல் வழி கல்வி அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழக ஓய்வூதியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

இரண்டாவதாக, பல்கலைக்கழகத்தின் தவறான நிர்வாகம் காரணமாகவும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், தவறான நிதி நிர்வாகம் நடைபெற்ற காலத்தில் இங்கு பணியாற்றிய உயர் அலுவலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல், ஓய்வூதியர்களுக்கு பணம் தருவதை, மறுப்பதை ஏற்க முடியாது. கடந்த 1993-ஆம் ஆண்டிலிருந்து 2023 வரையான 30 ஆண்டு காலகட்டத்தில் தணிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்தக் காலகட்டத்தில் இருந்த துணைவேந்தர்கள், பதிவாளர்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில நிதித்துறைச் செயலாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உட்பட பலரும் இருந்துள்ளனர். அப்போது இதனை சரி செய்திருக்க வேண்டும். அரசு ஆணை எண் 174 செல்லாது. தணிக்கை அறிக்கை என்பது பல்கலைகழக தன்னாட்சியில் தலையிட முடியாது என நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, நிதித்துறை மற்றும் உயர்கல்வித்துறை செயலர்கள் மீண்டும் மீண்டும் பல்கலைக்கழகத் தணிக்கை குறித்து கேள்வி எழுப்புவது அர்த்தமற்றது.

தற்போதைய சூழலில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நிதிநிலையை அத்தனை எளிதாக சரி செய்துவிட முடியாது. அதுமட்டுமன்றி, பல்கலைக்கழகப் பணிகளை சேவை நோக்கத்தில் தான் அணுக வேண்டும். இது தொழிற்சாலை அல்ல. கடந்த 1966-ஆம் ஆண்டு இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டபோது, இதனை கிராமப்புறம் சார்ந்த கல்வி நிறுவனமாகத்தான் தொடங்கப்பட்டது.

ஆகையால், ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு நல்வாய்ப்பாக இருக்கக்கூடிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சீரமைத்து, இதன் வளர்ச்சிக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கி, தேவையான நிதி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழக அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் முழுவதுமாக ஸ்தம்பித்துப் போயுள்ளது. தற்போது பணியாற்றுவோருக்கும் கூட இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஆகையால் அந்த அலுவலர்களும், ஊழியர்களும் எவ்வாறு பணியாற்றுவார்கள்?

எங்கள் ஓய்வூதியர்களில் பலர் இந்த வருமானத்தை நம்பியே காலம் கழிக்கிறார்கள். அவர்கள் தங்களது குடும்பத்தை எவ்வாறு சமாளிப்பார்கள்? என்பதை தமிழக அரசு எண்ணிப் பார்க்க வேண்டும். பல்கலைக்கழகத்திற்கு இருக்கின்ற நெருக்கடியைவிட எங்களது குடும்ப நெருக்கடி மிகுந்த வேதனைக்குரியது. இந்த நெருக்கடியால் தான் தற்போது உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழகத் தரப்பில் விசாரித்த போது, "நிதிப்பற்றாக்குறை மிகக் கடுமையாக உள்ளது. ஆனாலும், அதனைச் சமாளித்து தற்போது வரை அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் போட்டு வருகிறோம். ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியம் இன்று வழங்கப்பட்டுவிடும். வருகின்ற மாதங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:“சட்டம் என்பது ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பொதுவானதுதான்” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

ABOUT THE AUTHOR

...view details