மதுரை:உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர் .
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக விழா, கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனுக்கு மங்கள வாத்தியங்கள் முழங்கிட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கிரீடம் சூட்டி, செங்கோல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அம்மனிடமிருந்து செங்கோலை பெற்ற தக்கார் கருமுத்து கண்ணன் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சி அம்மனின் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பித்தார். பட்டாபிஷேக விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.