நாமக்கல் குமாரபாளையத்தில் செல்ல அன்பரசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 29ஆம் தேதி கேரளாவின் அகலி வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார் என மாலை 6.30 மணிக்கு எனக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. இறந்தவர் மணிவாசகம்தான் என்பதை உறுதி செய்ய தூரத்து உறவினர்களை காவல் துறையினர் அழைத்துள்ளனர். அவரது மனைவியே அவரை அடையாளம் காணத் தகுதியானவர்.
கேரள காவல் துறையினரால் மணிவாசகம் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இந்நிலையில் மணிவாசகத்தின் மனைவி கலா, அவரது சகோதரி சந்திரா ஆகியோர் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்கக் கோரியும் அனுமதி வழங்கப்படவில்லை.