மதுரை: மதுரை மாவட்டம், பாலமேட்டில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கிய அரவிந்த் ராஜ் விலா பக்கம் காளை மாடு முட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், அவரது பெற்றோர் நினைவு தினம் அனுசரித்தனர்.
இந்த நிலையில், ஈடிவி பாரத்திற்கு அரவிந்தராஜின் தந்தையார் ராஜேந்திரன் கண்ணீர் மல்க அளித்த நேர்காணலில், "தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் தொடர்ந்து மூன்று வருடங்களாக எனது மகன் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டு போது ஒன்பது காளைகள் பிடித்து முன்னணியில் இருந்தார். அந்த ஆண்டு முதல் பரிசு வாங்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து விளையாடினார். என்னுடைய மகனின் இறப்பு எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பேரிழப்பாகும்.
என்னுடைய மூத்த மகன் நரேந்திர ராஜூயை விட இளைய மகன் அரவிந்தராஜ் மிகத்துடிப்பானவர். தமிழர்களின் கலாச்சார பாரம்பரியத்தின் மீது அவருக்கு இயல்பிலேயே மிக ஆர்வம் இருந்தது. அவர் இறந்தபோது கூட நான் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
ஆனால் என்னுடைய வேண்டுகோள் என்பது அவருக்கு ஒரு நடுகல் எழுப்பி, நினைவிடம் ஒன்று உருவாக்க வேண்டும் என்பதுதான். இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி அலுவலர் மற்றும் கிராம கமிட்டிக்கும் மனு அளித்துள்ளேன். ஆனால் இதுவரைக்கும் எந்த ஒரு தகவலோ நடவடிக்கையோ இல்லை.
பாலமேடு ஜல்லிக்கட்டில் இப்படி ஒரு வீரன் விளையாடினான் என்பதை எதிர்கால தலைமுறையினரிடம் விதைக்க வேண்டும். அந்த ஒரு பேரும், புகழும் அரவிந்தராஜுக்கு கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். என் மகனுக்கு ஏற்பட்ட நிலை மற்ற ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் கடவுளிடம் எனது முறையீடு. நான் படுகின்ற துயரமும், வேதனையும் மற்ற பெற்றோர்கள் நிச்சயம் அடையக்கூடாது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தொன்று தொட்டு நடைபெற வேண்டும்.