மதுரை:பெற்றோர் விவகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் வெளிநாடு செல்ல மகனுக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என்ற பாஸ்போர்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமணி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறேன். விவாகரத்து வழக்கு கன்னியாகுமரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எனது 2 பிள்ளைகளை பராமரித்து வருகிறேன். பிளஸ் 2 முடித்த என் மகன் சிவவிக்னேஷ் முருகேசனுக்கு(18), மால்டோவா நாட்டில் எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.
சிறுவயதில் எடுத்த பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டதால், புதுப்பித்து தரக்கோரி விண்ணப்பித்தோம். எங்களது விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவு அல்லது இருவரின் கையொப்பமின்றி பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து தர மறுத்துவிட்டனர். இதனால், என் மகனின் எதிர்காலம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக பாஸ்போர்ட்டை புதுப்பித்து தருமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.