விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில்," தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜனவரி 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவியை திமுக பிடிக்கும் அளவுக்கு இந்த ஒன்றியங்களில் திமுக கவுன்சிலர்கள் அதிகளவில் வெற்றிப்பெற்றுள்ளனர். இந்த 9 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
விருதுநகர் மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை பலம் இல்லாத ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் பதவியை பிடிக்கும் நோக்கத்தில் அதிமுகவினர், அரசு ஊழியர்கள், போலீஸார், குற்றப் பின்னணி கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் திமுக கவுன்சிலர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் மிரட்டி வருகின்றனர். திமுக கவுன்சிலர்களை கடத்த திட்டமிட்டுள்ளனர்.
தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அதிகாரிகளின் துணையுடன் திமுக கவுன்சிலர்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தடுக்கவும், வாக்களிப்பதை தடுக்கவும் அதிமுகவினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் அச்சமின்றி பங்கேற்று ஜனநாயக கடமையாற்ற தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விருதுநகர் மாவட்ட ஊராட்சி மற்றும் 11 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர்கள் அச்சமின்றி பங்கேற்கவும், தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவும் திமுக கவுன்சிலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் மிரட்டல் தொடர்பாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் புகார் அளித்தால் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.