தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அது என்னப்பா நுங்கு வண்டி பந்தயம்..? மதுரை அருகே மாஸ் காட்டிய குழந்தைகள்!

மாட்டு வண்டி, குதிரை வண்டி மற்றும் கார் பந்தயங்களையெல்லாம் நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம். ஆனால், மதுரை அருகே முதல்முறையாக நுங்கு வண்டி பந்தயம் நடத்தி அசத்தியிருக்கிறார்கள், பனை மற்றும் இயற்கை ஆர்வலர்கள். அவர்கள் குறித்து விளக்குகிறது, இந்த செய்தித்தொகுப்பு...

palm fruit festival in thangalacheri villiage
அது என்னப்பா நுங்கு வண்டி பந்தயம்..? மதுரை அருகே மாஸ் காட்டிய குழந்தைகள்

By

Published : Apr 6, 2023, 6:09 PM IST

அது என்னப்பா நுங்கு வண்டி பந்தயம்..? மதுரை அருகே மாஸ் காட்டிய குழந்தைகள்

மதுரை: திருமங்கலம் அருகே தங்களாச்சேரி என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காளியம்மன், முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். எனவே, இந்த ஆண்டும் இந்த திருவிழாவினை ஒட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. தற்போது உள்ள காலகட்டத்தில், குழந்தைகள் முதல் இளைய தலைமுறை என அனைவரும் நமது வாழ்க்கையின் இன்றியமையாத சில இயற்கையான அம்சங்களைக் கூட சிறிது சிறிதாக மறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதில் முக்கியமான ஒன்று, நமது குழந்தைப்பருவ விளையாட்டு. கோலி, பம்பரம், நொண்டி எனப் பல விளையாட்டுப் பட்டியல்கள் இருந்தாலும், நுங்கு வண்டியின் சிறப்பை எவற்றாலும் ஈடு செய்ய முடியாது. சில விளையாட்டுகள் மட்டுமே வாழ்க்கையோடு கலந்து இருக்கும். அந்த வகையில், முன்பு வெயில் காலங்களில் நுங்கை தேடி தேடி உண்டு, அதன் மட்டையில் வண்டி செய்து, அதே வெயிலில் சுற்றி அலைவோம். ஆனால், தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரும் அதன் பெருமையை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

எனவே, இந்நிலையில் பனை மரத்தின் அருமையை இளைய தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வகையில், இந்த திருவிழாவில் பனை நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் உள்ளூர்க் குழந்தைகள் மட்டுமன்றி, அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில், ஏறக்குறைய 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இந்நிலையில், போட்டியின் முதல் பரிசு ரூ.350 என்றும் 2-ஆம் பரிசு ரூ.250 என்றும் மேலும் 3-ஆம் பரிசு ரூ.150 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் ஆர்வ மிகுதி காரணமாக, கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் விழாக்குழுவினர் பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.

மேலும், இந்தப் போட்டியை நடத்திய அரிட்டாபட்டி மலைப் பாதுகாப்பு ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''நுங்கு வண்டி திருவிழா என்ற பெயரில் இந்தப் போட்டியை நடத்துகிறோம். பனை நுங்கு என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக இயல்பாக இருந்திருக்க வேண்டிய ஒரு அம்சம். இந்த விளையாட்டு குறித்து, இப்போதுள்ள தலைமுறைக்குத் தெரியாமலேயே போய்விட்டது. பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த நுங்கு, நமது உணவுப் பழக்கத்திலிருந்து அந்நியமாகிவிட்டது.

மூன்று மாதங்கள் விளையக்கூடிய இந்த நுங்குப் பயன்பாட்டை நாம் அதிகரிக்க வேண்டும். வயிறு சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நுங்கு மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. அந்த நுங்கை சாப்பிட்டுவிட்டு, அதனையே வண்டியாகச் செய்து குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த காலம் இருந்தது. ஆனால், இன்றைக்கு அந்த மரபை மறந்துவிட்டோம். அதனை மீண்டும் கொண்டு வருவதற்காகத்தான் தற்போது இதை திருவிழாவாக நாங்கள் நடத்துகிறோம்'' என்றார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், ''இந்தப் போட்டிக்கான எல்லைக் கோடுகளாக கடம்ப மரக்கன்றுகளையே வைத்துள்ளோம். அந்த மரம் குறித்தும் குழந்தைகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். பனை மரங்கள் அனைத்தும் அழியும் தருவாயில் உள்ளன.

அவற்றைக் காப்பதற்கு பல்வேறு வகையான முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், குழந்தைகளின் விளையாட்டுக்கான ஒரு விசயமாக இதை மாற்றினால், அவர்களுக்கு மிக எளிதாக விழிப்புணர்வு ஏற்படும் என்பதற்காக பனை நுங்கு வண்டி போட்டியை நாங்கள் நடத்துகிறோம். அன்னவயல், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தங்களாச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இணைந்து, இந்தப் போட்டியை நடத்துகின்றன. இதில் மிகுந்த ஆர்வத்துடன் குழந்தைகள் பங்கேற்றது, எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

மேலும், போட்டிக்கு முன்னதாக குழந்தைகள் அனைவருக்கும் பனை மட்டையில் வண்டி செய்வது எப்படி என்பது குறித்து அரிட்டாபட்டி ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார். இதனால் குழந்தைகள், தாங்கள் செய்த அந்த வண்டியின் வாயிலாகவே போட்டியில் பங்கேற்றனர்.

இந்தப் போட்டி நடைபெறும்போது, கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் அனைவரும் தங்களுக்கும் இந்தப் போட்டியை நடத்தக் கூறியதால், அவர்களுக்கும் இப்போட்டியை நடத்தி விழாக்குழுவினர் உற்சாகப்படுத்தினர். மிக வித்தியாசமான இந்த முயற்சி குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் பனை மரங்கள் குறித்த நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இதையும் படிங்க:தஞ்சை மேயர், துணை மேயர் மோதல்.. உட்கட்சி பூசலால் மாநகராட்சி பணிகள் ஜர்க்!

ABOUT THE AUTHOR

...view details