மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக, மதுரையில் கோலாகலமாக திருவிழா போன்று இந்த ஜல்லிக்கட்டைக் கொண்டாடுகின்றனர். தை மாதம் முதல் நாளான நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் மாடு பிடி வீரர் கார்த்திக் என்பவர், 17 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அதனைத் தொடர்ந்து, இன்று பாலமேட்டிலும், நாளை அலங்காநல்லூரிலும் நடைபெறுகிறது.
தற்போது விறுவிறுப்பாக பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியானது, காலை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் துவங்கப்பட்டது. முன்னதாக 8 சுற்றுகள் நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்க சுமார் 3 ஆயிரத்து 677 காளைகளும், 1,412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்த நிலையில், மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, ஆயிரம் காளைகளும், 700 மாடு பிடி வீரர்களும் தேர்வாகி போட்டிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில், ஒவ்வொரு சுற்றிலும் 50லிருந்து 75 மாடுகளை அவிழ்க்கப்பட்டு வருவதாகவும், 4 சுற்றுகள் முடிவில் 370க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்க்கப்பட்டுள்ளதாகவும், அதில் மாடுபிடி வீரர்கள் 10 பேரும், மாட்டின் உரிமையாளர்கள் 7 பேரும், பார்வையாளர்கள் 5 பேரும், காவல்துறை 2 என 24 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 3 பேர் மேல்சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.