மதுரை:பொங்கல் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று (ஜனவரி 15) காலை 7.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில், ஐந்தாவது சுற்றின் தொடக்கத்தின்போது முடுவார்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன் 17 என்ற எண் கொண்ட சீருடை அணிந்து எட்டு காளைகளைப் பிடித்து இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இவர் ஆன்லைனில் பதிவுசெய்யப்பட்ட சக்கரவர்த்தி என்பவரது பெயரில் வாங்கிய சீருடையை அணிந்து ஆள்மாற்றி முறைகேடாக விளையாடியது கண்டறியப்பட்டது. இதேபோல் ஐந்து காளைகளைப் பிடித்து 3ஆவது இடத்தில் இருந்த சின்னப்பட்டி தமிழரசன் என்பவர் முடுவார்பட்டியைச் சேர்ந்த கார்த்தி என்பவரது சீருடையை மோசடியாக அணிந்து விளையாடியதும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் வருவாய்த் துறையினர் போட்டியிலிருந்து வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.