மதுரை மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆக்ஸிஜன் தேவை, சிகிச்சை குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து த.அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “மதுரை அரசு மருத்துவமனைகளில் கரோனா பிரிவில் 90 விழுக்காடு ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மொத்தமிருந்த 1,100 படுக்கைகளில் ஆயிரம் படுக்கைகள் நிரம்பிவிட்டன. மதுரை அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது. மதுரையில் நூறு விழுக்காடு ஆக்ஸிஜன் தேவையிருந்த நிலையில், தற்போது ஆக்ஸிஜன் தேவை 300 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
புதிதாக அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளில் முப்பது விழுக்காடு பேருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன்களை உடனுக்குடன் நிரப்பவும், ஆக்ஸிஜனை வீணாக்காமல் பயன்படுத்துவதை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை, ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுடன் பெற்றுக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் உயிர்காக்கும் அவசர தேவைக்கு ஆக்ஸிஜன் தேவையை சரி செய்ய துணை இயக்குனர்கள், மருத்துவ அலுவலர்கள் அடங்கிய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் தேவை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் கோவிட் கட்டுப்பாட்டு பகுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கரோனா அரசு மருத்துவமனைகள் என மூன்று பகுதிகளில் கரோனா சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனியார் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாட்டு பகுதியில் 1,500க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
'மதுரையில் ஆக்ஸிஜன் தேவை 300 விழுக்காடு அதிகரிப்பு' - மாவட்ட ஆட்சியர் அன்பழகன் - மதுரை அண்மைச் செய்திகள்
மதுரை : நூறு விழுக்காட்டிலிருந்த ஆக்ஸிஜன் தேவை, தற்போது 300 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் செய்தியாளர்களிடத்தில் பேட்டியளித்தார்.
'மதுரையில் ஆக்ஸிஜன் தேவை 300 விழுக்காடு அதிகரிப்பு' - மாவட்ட ஆட்சியர் அன்பழகன்