அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வசித்துவருபவர் சுபாஷ் சந்திர கபூர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை கடத்தல், தடுப்பு பிரிவு காவல்துறையினர் சிலை கடத்தல் சம்பந்தமாக என் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நான் அமெரிக்க வாழ் குடியுரிமை பெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். "அர்ட் ஆஃப் பாஸ்ட்" என்ற தலைப்பில் சிலை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றினை அமெரிக்காவில் நடத்தினேன். இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் வைக்கப்பட்டதாக, தமிழ்நாடு சிலை கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் சொந்த வேலை காரணமாக ஜெர்மனி சென்றிருந்தபோது "ரெட் கார்னர் நோட்டீஸ்" மூலம் 2011ஆம் ஆண்டு ஜெர்மனி காவல்துறையினர் என்னைக் கைது செய்தனர். கடந்த 2012ஆம் ஆண்டு இந்திய காவல் துறையினரிடம் என்னை ஒப்படைத்தனர். இவ்வழக்கில் இதுவரை 30 சாட்சியங்களை தமிழ்நாடு சிலை கடத்தல், தடுப்பு பிரிவு காவல்துறை விசாரணை செய்தனர்.
என் மீது நான்கிற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 71 வயதாகிய எனக்கு புற்றுநோய் பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது வரை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் என்னுடன் கைதான 14 பேரில் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.