மதுரை:திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் பீரங்கிமேடு பகுதியைச்சேர்ந்த கரிகாலன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'பாதுகாப்புத்துறையின்கீழ் உள்ள திருச்சி கன அலாய் ஊடுருவல் திட்டத்தில் பணியாற்றி, கடந்த 2019ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன். ஓய்வு பலனாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகையைக்கொண்டு, எனது 2 மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தேன்.
அந்த சமயத்தில் திருச்சி தில்லைநகரில் ஆயுசுநூறு என்ற நிதி நிறுவனத்தில் குறுகிய கால முதலீட்டுத்திட்டங்கள் இருப்பதாக அறிந்து, அதன் நிர்வாக இயக்குனர் சிவபாலன் மற்றும் சிலரைச் சந்தித்தேன். மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட பயன்பாட்டிற்கு உரிய பொருட்களை விற்கும் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் விற்பனைக்கும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் பங்குத்தொகை, ஊக்கத்தொகையை மாதந்தோறும் அளிப்பதாகவும் கூறினர்.
கவர்ச்சி பேச்சால் ஏமாந்தேன்
அவர்களின் கவர்ச்சிகரமான பேச்சை நம்பி, என் பெயரிலும், எனது மனைவி பெயரிலுமாக ரூ.27 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்தேன். நான் மட்டுமல்லாமல் எனது மனைவியுடன் பணியாற்றும் சக ஆசிரியைகள் உள்ளிட்டவர்களும் இந்த நிதி நிறுவன திட்டங்களில் பல லட்சங்களை முதலீடு செய்தனர்.
திடீரென ஊரடங்கை காரணம் காட்டி நிதிநிறுவனத்தை மூடிவிட்டனர். வட்டியோ, ஊக்கத்தொகையோ எதையும் எங்களுக்குத் தரவில்லை.
இந்த மோசடி குறித்து பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நிதி நிறுவனம் நடத்தி, எங்கள் பணத்தை மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்தப் பணத்தை மீட்டு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து தொடர்புடைய காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி, அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதுதொடர்பான விசாரணையை வருகிற 20ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'அவங்களுக்கு வந்தால் ரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா' - தயாரிப்பாளர் ஆதம் பாவா