மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் லோக்கைசாமி. இவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்தார்.
அதில், "கரோனா நோய்த்தொற்றின் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் கோயில் மூடப்படும் எனத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது தமிழ்நாட்டில் அதிக அளவு கரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்படுகின்றன.
அரசு அலுவலர்கள் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவு
தமிழ் மாதமான புரட்டாசியில் உள்ள அனைத்துச் சனிக்கிழமைகளும் மிகப் பிரசித்திப் பெற்றவை. இதனால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் கோயில்களைத் திறப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என மனு அளித்தேன்.
இந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் புரட்டாசி மாதத்தில் உள்ள அனைத்துச் சனிக்கிழமைகளிலும், கோயில்களைத் திறக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு இன்று (அக். 1) நீதிபதிகள் துரைசுவாமி, முரளி சங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகம விதிகளின்படி அனைத்துப் பூஜைகளும் கோயில்களின் உள்ளேயே நடைபெற்றுவருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலர், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஆகியோர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:'கழுத்தை நெரித்துள்ளீர்கள்' - விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!