மதுரை: கரூரை சேர்ந்த பாஜக நிர்வாகி சந்திரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், மத்திய, மாநில அரசுகளின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அரசு பிறப்பித்துள்ள முறையில்தான் நம்பர் பிளேட் இருக்க வேண்டும்.
ஆனால் மோட்டார் வாகன சட்டத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள், தாங்கள் விரும்பிய அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா நடிகர்களின் படங்களை நம்பர் போர்டில் எழுதவும், ஸ்டிக்கர் மூலம் ஒட்டியும் வருகின்றனர். தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நம்பர் எழுதி உள்ளனர். இது சட்ட விரோதமானது.
இது குறித்து மாவட்ட போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் காவல் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சட்ட விரோதமாக இருக்கும் வாகனத்தின் நம்பர் போர்டுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். விதிகளை மீறி இருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று (டிச.2) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திலக் குமார், மனுதாரர் சந்திரசேகர், மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுக்கும்போது கோரிக்கையை மட்டும் வைக்கவில்லை.
சட்ட விரோத நம்பர் போர்டுகளை அகற்றவில்லை எனில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையின் உத்தரவின் பேரில் நாங்களே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என மிரட்டும் வகையில் மனு அளித்துள்ளார் என வாதிட்டார். இதனையடுத்து அம்மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர்.