மதுரை: கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், " கொடைக்கானல் ஏரியின் 8 செண்ட் நிலம் கொடைக்கானல் போட் கிளப்பிற்காகக் குத்தகைக்கு விடப்பட்டது. செப்டம்பர் 1ஆம் தேதியோடு, குத்தகை காலம் முடிந்து விட்டது.
இந்நிலையில், 2009இல் கொடைக்கானல் ஏரி முழுவதுமாக கொடைக்கானல் நகராட்சியிடம் ஒப்படைக்கப்படுவதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான இடங்களை போட் கிளப்பினர் பயன்படுத்தி வந்தனர்.
அதோடு, போட் கிளப்பினரும், தனியார்( ஹால்டன்) விடுதியைச் சேர்ந்தவர்களும் எவ்வித அனுமதியும் பெறாமலும் நகராட்சிக்கு எவ்வித கட்டணத்தைச் செலுத்தாமலும், படகுகளை வாங்கி விட்டு, கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
இதனால் அரசுக்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. ஆகவே, அதனைத் தடுக்கும் வகையில் கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியை நடத்துவது தொடர்பாக வெளிப்படையான டெண்டர் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டுமெனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (அக்.22) நீதிபதிகள் துரை சுவாமி, முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கொடைக்கானல் போட் கிளப் தரப்பில், நீதிமன்றம் படகு சவாரி மேற்கொள்ளவும், போட் கிளப்பைச் சீல் வைக்கவும் உத்தரவிட்டது. ஆனால் போட் கிளப் அலுவலகமும் சேர்த்து சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நீதிபதிகள், கொடைக்கானல் போட் கிளப் அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர். மறு உத்தரவு வரும் வரை போட் கிளப்பைத் திறக்கவும், படகுகளை இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு; இன்றே விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவு!