மதுரை: மதுரை சோலையழகுபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். கடத்தல் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இவரை அவனியாபுரம் காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காவலர்கள் அடித்து துன்புறுத்தியதால் பாலமுருகன் மரணமடைந்ததாகவும், அவரது உடற்கூராய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும், நீதிபதி விசாரிக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி, பாலமுருகனின் தந்தை முத்துகருப்பன் ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.
வழக்கு விசாரணை நிலுவையில் இருந்த போது, முத்துகருப்பன் தனது மனுவைத் திரும்ப பெற்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஹென்றி டிபேன், மதுரை உயர் நீதிமன்ற கிளை நிர்வாக நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் காவலர்களின் அச்சுறுத்தல் காரணமாக முத்துகருப்பன் தனது மனுவை திரும்பப் பெற்றதாக கூறியிருந்தார்.
இக்கடிதத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்ற கிளை பதிவாளர் தரப்பில் தாமாக முன்வந்து பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலமுருகன் மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.