மதுரை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலம்பாறை தாலுகாவைச் சேர்ந்த அழகேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "1989ஆம் ஆண்டு தொழில் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு திண்டுக்கல் மாவட்டம், குஜிலம்பாறை தாலுகா பகுதியிலுள்ள கரிகாலி, பாளையம் மற்றும் டோலிபட்டி ஆகிய பகுதிகளில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்காக செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 ஆண்டுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஓடைகள், கண்மாய்கள் நிரந்தரமாக இருக்கும் கோயில்கள் ஆகியவை பாதிப்பு இல்லாதவாறு சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2002 மற்றும் 2003 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசாணைப் படி அதே தனியார் நிறுவனத்திற்கு புறம்போக்கு இடங்களில் சுண்ணாம்புக்கல் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக சுண்ணாம்புக்கல் எடுக்கப்படுவதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி நீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பல்வேறு இடங்களில் நீர் வாய்க்கால்கள் அழிக்கப்பட்டுள்ளது. தெய்வானைகுளம் கண்மாய் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.