மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61ஆவது குருபூஜையை முன்னிட்டு, கடந்த 25ஆம் தேதி, பசும்பொன்னில் உள்ள தேவரின் சிலைக்கு அணிவிப்பதற்காக மதுரை அண்ணா நகரில் அமைந்துள்ள வங்கியில் இருந்து தேவரின் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன் எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார்.
கடந்த 6 நாட்களாக அந்த தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு பொதுமக்களால் வழிபடப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கக் கவசம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”கடந்த 25ஆம் தேதி தங்கக் கவசத்தை எடுத்து பொது மக்கள் மரியாதை செலுத்துவதற்கு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் வைத்து விட்டு, தற்போது மறுபடியும் வங்கியில் மீண்டும் ஒப்படைத்துள்ளோம். எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் அனைத்து நிகழ்ச்சிகளும் நன்றாக நடந்து முடிந்துள்ளன.
அதிமுகவின் சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் மரியாதை செலுத்தினார்கள். பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரும் போது யார் கல்வி வீசினார்கள் என்று எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்த பின்பு தான் எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாயின் வண்டியில் தான் சென்றோம்.
ஆனால் கல் எங்கு விழுந்தது என்று எங்களுக்கு தெரியாது. தற்போது காவல்துறையினர் இரண்டு பேரை விசாரித்து வருகின்றனர். காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். பணம் கொடுத்தால் கல் வீசும் நபர்கள் உள்ளனர். அதே போல பணம் கொடுத்து அதை செய்ய வைத்திருப்பார்கள்.