தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கின் உண்மை நிலை வெளிவர வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோடநாடு விஷயத்தில் கூடுதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

By

Published : Jul 14, 2023, 4:14 PM IST

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்

மதுரை: 'கோடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது. அதற்கு உரிய விசாரணை செய்து, விரைவாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்' என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தன் சொந்த ஊரான பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்திய பாஜக அரசு விவாதம் ஆக்கியுள்ள பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பது அவருடைய கொள்கை சார்ந்தது. பொது சிவில் சட்டம் நாட்டுக்குத் தேவையா தேவையில்லையா என்பது குறித்து சட்ட வழக்கறிஞர் குழுவிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம். வந்தவுடன் விரிவான அறிக்கை தரப்படும்'' என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, ''இது தொடர்பாக கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிடுவேன்'' என மேலோட்டமாகவே கருத்து தெரிவித்தார். மேலும் தமிழக மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் கோடநாடு கொலை வழக்கு அவசியமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ''கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து, தமிழகத்திலுள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை நாட்டு மக்களுக்கு தந்த ஜெயலலிதாவின் பங்களா அமைந்துள்ள கோடநாட்டில், யாரும் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரிய கொலையும், கொள்ளையும் நடந்திருக்கிறது.

அதற்கு உரிய விசாரணை செய்து விரைவாக குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. ஒரு நாட்டின் முன்னாள் முதலமைச்சருக்கு, இந்த நிலையா என்பது குறித்து தமிழக மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறார்கள். உண்மை வெளிவர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். அதற்காகவே போராட்டம் நடத்துகிறோம்'' எனப் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து தென்காசி தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை குறித்த கேள்விக்கு,''வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டார். மேலும் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று ஜெயக்குமார் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூறியது குறித்த கேள்விக்கு, ''அவர்களுடைய உண்மையான அடிமனதில் இருக்கின்ற குணம் என்னவாக இருக்கிறது என்பதை கட்சியின் தொண்டர்களும் மக்களும் புரிந்து இருக்கிறார்கள்'' எனப் பதிலளித்தார். முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க வந்த கட்சி நிர்வாகிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரின் வழிமுறைகளை மீறி கூட்டமாக சென்றதால் விமான நிலையத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:பாஜக நிர்வாகி S.G. சூர்யாவிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details