இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரயில்வே துறையில் பொறியியல், இயந்திரவியல், மின்சார பணிகள், தொலைத் தொடர்பு, மருத்துவமனை, பணிமனை ஆகிய பிரிவுகளில் உதவியாளர், ரயில் பாதை பராமரிப்பு பணியாளர் போன்ற பதவிகளுக்கு 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பு எண் RRC - 01/2019 வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
தவறுதலான புகைப்படம் மற்றும் கையெழுத்துக்காக சில விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிய விண்ணப்பதாரர்களுக்கு தற்போது மேலும், ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி அதிகாரப்பூர்வ ரயில்வே தேர்வாணைய இணையதளங்களில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாறுதலுக்கான ஒரு இணையதள இணைப்பு கொடுக்கப்பட இருக்கிறது.
மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை
அந்த இணையதள இணைப்பைப் பயன்படுத்தி தங்களது சரியான புகைப்படம் மற்றும் கையெழுத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். தங்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதா அல்லது நிராகரிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிய ரயில்வே தேர்வு ஆணைய இணையதளங்களில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது இல்லை.
இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம்
ரயில்வே தேர்வாணைய தேர்வுகள் முழுவதும் கணிப்பொறி மயமாக்கப்பட்டுள்ளன. மேலும், தகுதியின் அடிப்படையிலேயே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே இடைத்தரகர்களை அணுகி ஏமாற வேண்டாம். ரயில்வே தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.20,353 கோடி மதிப்பிலான மோசடி சொத்துகள் கண்டுபிடிப்பு - அரசு தகவல்