மதுரை: அதிக கிராமப்புறங்களை உள்ளடக்கிய மதுரை, சென்னைக்கு அடுத்தபடியாக 100 வார்டுகளைக் கொண்ட பெரிய மாநகராட்சி ஆகும். மதுரை நகர்ப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக, 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல், அங்குள்ள மருத்துவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகப் புகார் எழுந்தது.
இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் பிரசவங்கள், அவர்களில் மேல் சிகிச்சைக்கு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாய்மார்கள் விவரம் எனப் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு கிடைத்த பதிலில், 'மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2020 ஜனவரி முதல் 2022 அக்டோபர் வரை 22 மாதங்களில் சுமார் 2,592 பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. சராசரியாக ஒரு மாதத்திற்கு 117 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளன. 22 மாதங்களில் 31 நகர்ப்புற சுகாதார மையங்களில் இருந்து 14,291 கர்ப்பிணி தாய்மார்கள் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
31 நகர்ப்புற சுகாதார மையங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்குச் சொந்தமான 31 நகர்ப்புற சுகாதார மையங்களில் இருந்து சராசரியாக மாதத்திற்கு 20 கர்ப்பிணிகளுக்கு மேல் சிகிச்சை என்ற பெயரில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிகப் பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!