மதுரை: மதுரை ஆவின் தொழிற்சாலையில் எட்டு மாவட்டங்களை சார்ந்த ஆவின் அலுவலர்களுக்கான பயிற்சியை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (அக்.06) தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆவினில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன் மேம்பாடு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த நான்கு மாதங்களாக எடுத்துள்ள முயற்சி நல்ல பலனை அடைந்துள்ளது. பால் கொள்முதல் குறைந்து கொண்டே வருகிறது என்பது சித்தரிக்கப்பட்ட தகவல். தனியார் உற்பத்தியாளர்கள் போட்டியை முறியடிக்க முடியும். தற்போது கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வசதிகள், பராமரிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பணிகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த மாதம் பல்லாயிரக்கணக்கான கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்க உள்ளோம். உலக அளவில் பார்த்தோமானால் கால்நடை வளர்ச்சி மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. நாளைய தினம் (அக்.07) இரண்டு திட்டங்களை துவக்கிவைக்க உள்ளோம். நல்ல பால் வழங்குவோருக்கு ஒரு ரூபாய் கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நாளை திண்டுக்கல்லில் துவங்க உள்ளோம்.