ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரின் மகள் சந்தியா (17). மாற்றுத்திறனாளியான இவர், எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராக வேண்டும் என்று தந்தையிடம் கூறியுள்ளார். மகளின் கனவு நிறைவேற அனைத்து உதவிகளையும் செய்துள்ளார் முனியசாமி. மருத்துவர் கனவை நிறைவேற்ற கடுமையாக படித்து தேர்வுக்கு தயாராகியுள்ளார் சந்தியா.
இந்நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வு பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று நடந்தது. சந்தியாவிற்கு மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இவரும் ஆதார் அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, பெற்றோரிடம் ஆசி வாங்கிவிட்டு சிரித்த முகத்துடன் தேர்வு எழுத வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். மகளும் நன்றாக தேர்வு எழுதி மருத்துவராகி குடும்பத்தை காப்பாற்றுவாள் என்று ஆசையோடு அனுப்பிவைத்த பெற்றோருக்கு, ஒரு பேரதிர்ச்சியான செய்தி மட்டுமே வந்துள்ளது.
தேர்வு முடித்துவிட்டு பேருந்தில் ராமநாதபுரம் திரும்பி வந்து கொண்டிந்தபோது சந்தியா திடீரென மயங்கி விழுந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் சந்தியாவை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்ததும், பதறி அடித்து மருத்துவமனை வந்தார் முனியசாமி. நீட் தேர்வை எழுதுவதற்காக சென்ற மகள் சடலமாக படுத்து கிடப்பதை பார்த்து முனியசாமி கதறி அழுதது, அங்கிருந்தவர்களை கண் கலங்கச் செய்தது.
நீட் தேர்வு எழுதி திரும்பிய மாணவி மயங்கி விழுந்து பலி தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் வரையில் சென்று போராடிய உயிர் நீத்த அனிதா தொடங்கி, தற்போது சந்தியா வரையில் எண்ணற்ற வருங்கால மருத்துவர்களை இழந்து வருகிறோம். உயிர்களை காப்பாற்றுவதற்கு படிக்கும் மருத்துவ படிப்பின் நுழைவுத் தேர்வு, பல மாணவ, மாணவிகளை காவு வாங்கி வருவது வேதனையின் உச்சமாக உள்ளது.