மதுரை:ஒன்றரை மாத குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர், செவிலியரின் அலட்சியத்தால் குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மதுரையைச் சேர்ந்த சிந்துஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ''எனக்கு குழந்தை பிறந்து 45 நாட்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்துவதற்காக மருத்துவரின் அறிவுறுத்தலின்படி அருகில் இருக்கும் அங்கன்வாடிக்கு தடுப்பூசி செலுத்தச் சென்றேன். அப்போது அங்கு பணியாற்றிய செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி, ஒரு மருந்தினை கொடுத்து, 6 மணி நேரத்திற்கு ஒருமுறை 3 ML அளவு மருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
செவிலியரின் அறிவுறுத்தலின்படி எனது குழந்தைக்கு மருந்தினை வழங்கினேன். ஆனால், மருந்து அளித்த பின்னர் எனது குழந்தையின் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு மருத்துவரையும், செவிலியரையும் அணுகி கேட்ட பொழுது முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக இருந்தனர்.
பின்னர் எனது குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த பொழுது, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைக்கு பாராசிட்டாமல் மருந்தினை அதிகப்படியாக வழங்கியதாலேயே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும் எனது குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தின் காரணமாகவே, எனது குழந்தை உடல்நிலை மோசமான நிலையில் பாதிக்கப்பட்டது. எனவே, அலட்சியப்போக்கில் செயல்பட்ட அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிகாரிகளிடம் மனு அளித்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.