மதுரை:கேரள மாநிலத்தின் பண்பாட்டு விழாவாகவும், தனிப்பெரும் அடையாளமாகவும் திகழ்கின்ற ஓணம் திருநாள், சாதி, மதம் கடந்த கொண்டாட்ட நிகழ்வாக உள்ளது. தமிழர்களுக்கு பொங்கல் திருநாளைப் போன்று மலையாளிகளுக்கு ஓணம் திருநாள். ஆனால், இந்த நாளை பழந்தமிழர்கள் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே வெகுவாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பழம்பெரும் மதுரையின் மாந்தர்களாலும் கொண்டாடி மகிழப்பட்ட செய்திகள் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
நதி நீராட்டு:மாயோனாகிய திருமாலின் நினைவாக நிகழ்த்தப்படும் ஓணம் திருவிழா, ஆவணி அவிட்டத்தில்தான் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர் மு. இராகவையங்கார் கூறுகிறார். தற்போது இதே அவிட்ட நாளில்தான் பிராமணர்கள் புதுப்பூணூல் அணிந்து பூணூல் தரிக்கும் நிகழ்வினை வழக்கமாக்கியுள்ளனர். ஏழு நாள் நடைபெற்ற ஆவணி ஓண விழாவின் இறுதி நாளில், அந்தி சாயும் நேரத்தில் நதி நீராட்டு நிகழ்வோடு இவ்விழா நிறைவடையும்.
சேரிப்போர்:கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் விழாவும், மதுரைக் காஞ்சியில் குறிப்பிடப்படும் ஓண நன்னாள் நிகழ்வும் பெரிய அளவில் வேறுபடவில்லை. ஆறாட்டு, பெருவிருந்து, சேரிப்போர், புத்தாடையணிந்து பரிசளித்தல். பல சமயத்தாரும் பங்கேற்றல். ஏழுநாட்கள் தொடர்ந்து நிகழ்தல் என்று இன்றைய ஓண விழாவைப் போன்றே அன்றும் ஏழு நாட்கள் நிகழ்ந்திருக்கின்றன.
எழுநாள் அந்தி:இதனை மதுரைக் காஞ்சி 'கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி' என்றே ஓண விழாவைச் சிறப்பித்து பாடுகிறது. சேரிப்போர் நிகழ்வில் வீரர்கள் தம் போர்த்திறனை பொது மக்கள் கண்டு களிக்கும் வண்ணம் வெளிப்படுத்தப்படுகிறது. (தற்காலத்தில் கப்பற்படை, விமானப்படைகள் மக்கள் முன்பாக சாகச நிகழ்ச்சி மேற்கொள்வதை இதனோடு ஒப்பிடலாம். இந்திய குடியரசு நாளன்று முப்படை அணிவகுப்பும் நடைபெறுவதையும் ஒப்பிட்டு பார்க்கலாம்)
மாயோனுக்குரிய ஓண நாள்:ஓணநாள் மாயோனுக்கு உரியதாகவும் (மதுரை 590-599), ஆதிரை நாள் முக்கண்ணனுக்கு உரியதாகவும் வழங்கப்பட்டு (பரி.11: 74-78) சிறப்பாக விழாவெடுக்கப்பட்டன. இவை ஆவணித் திருவோணமும் மார்கழித் திருவாதிரையும் ஆகும்.
கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்.
மாயோன் மேய ஓண நல்நாள் (மதுரை 590-591)