ஒரு பனை மரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். மதுரை மாவட்டம் கரும்பாலையில் 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் கம்பீரமாய் நிமிர்ந்து வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை வளர்த்து வரும் 67 வயது முதியவர் சீனிராஜன் இதிலிருந்து விழும் பனம்பழங்களைச் சேகரித்து தன் வீட்டுக்குப் பின் புறம் உள்ள வெற்றிடத்தில் பதியம் செய்து அதன் மூலம் பனங்கிழங்காக அறுவடை செய்துவருகிறார். பிளாஸ்டிக் கழிவு பொருட்களை தரம் பிரித்து விற்பனை செய்வது தான் இவரது பிரதான தொழில். பனங்கிழங்கு உணவின் அருமையை அனைவருக்கும் உணர்த்தவே இதை செய்துவருகிறார் சீனிராஜன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என் வீட்டிற்கு பின்புறம் உள்ள பனை மரங்களில் இருந்து பனம் பழங்களை சீசன் நேரத்தில் சேகரித்து வைப்பேன். அதனை வீட்டிற்கு பின்புறம் நூற்றுக்கணக்கில் பதியம் செய்து பராமரிக்கிறேன்.
100 நாள்களுக்கு பிறகு அவற்றில் இருந்து பனங்கிழங்குகளை அறுவடை செய்து எனது அக்கம்பக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கும் நண்பர்கள் உறவினர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறேன்" என்கிறார். மேலும், "பனைமரத்தின் அருமைகளை நாம் உணராமல் இருக்கிறோம் அதிலிருந்து கிடைக்கும் கிழங்கு மிக அற்புதமான உணவாகும்.
பனங் கிழங்குகளை வழங்கும்போது இதன் அருமை பெருமைகளை சொல்லி வழங்குகிறேன். நம் உடல் நலனுக்கு ஏற்ற உணவு. கடவுள் கொட்டிக்கொடுக்கும் இந்தப் பனம் பழங்களை நான் பதியம் போட்டு கிழங்காக அறுவடை செய்து வழங்குவது எனது கடமையாகக் கருதுகிறேன். அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தான் பனம் பழங்கள் நிறைய விழும் அச்சமயத்தில் அவற்றை எடுத்து சேகரித்து வைத்துக் கொள்வேன்" என்கிறார்.
மதுரை மாநகர் பகுதிகளில் ஆங்காங்கு ஒரு சில பனை மரங்களே உள்ள நிலையில், இருக்கின்ற ஓரிரு மரங்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். சீனிராஜனுக்கு உதவியாக இருக்கும் அவரது மனைவி எஸ்தர் கூறுகையில், நமது பழைய மரபுகளை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம் இனி வருகின்ற தலைமுறையினர் இதனை பின்பற்றி செயல்பட வேண்டும் என்கிறார்.