மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் கருப்பாயி (75). இவரது கணவர் ஏற்கனவே இறந்த நிலையில், தனது மகள் பழனியம்மாள் வீட்டில் வசித்துவந்தார்.
பழனியம்மாளின் கணவரும் இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் காளிதாஸ், மகள் காளீஸ்வரி, கருப்பாயியின் மருமகன் வசந்தகுமார் ஆகியோர் மூதாட்டியை பராமரித்துவந்தனர்.
இந்நிலையில், திருமங்கலத்தில் குடியிருந்த வீட்டில் கருப்பாயியின் உடலில் துர்நாற்றம் ஏற்படுவதால் வீட்டை காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியதாக தெரியவருகிறது.
இதனால், மதுரை திருநகரில் இருக்கும் வீடு ஒன்றில் குடியேற முடிவு செய்தனர். அங்கேயும் இந்த பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக மூதாட்டியை கொலை செய்ய முடிவு செய்தனர்.
இதனால் அவரை நேற்று முன்தினம் (ஆக.8) தலையணையால் முகத்தை அழுத்தியும் கழுத்தை நெரித்தும் நான்கு பேர் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் காளிதாஸும் வசந்தகுமாரும் சேர்ந்து மூதாட்டியின் உடலை மூட்டையில் கட்டி குண்டாறு மடைக்கு மிதிவண்டியில் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.
இதன் பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நடந்தேறிய கொடூர சம்பவங்கள் தெரிந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி வினோதினி, காவல் ஆய்வாளர் பரமேஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் விசாரணைக்கு பின்னர் நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
மூதாட்டியை பராமரிக்க முடியாமல் கொலை செய்து எரித்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...செல்போன் சார்ஜரில் மின்கசிவு: தாயுடன் 2 பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு