தமிழ்நாடு

tamil nadu

மதுரை தீ விபத்து எதிரொலி: பழமையான கட்டடங்கள் குறித்து விரைவில் ஆய்வு

By

Published : Nov 14, 2020, 4:24 PM IST

Updated : Nov 14, 2020, 6:07 PM IST

மதுரை: தமிழ்நாடு முழுவதுமுள்ள பழமையான கட்டடங்கள் குறித்து தீயணைப்புத் துறையின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என அத்துறை டிஜிபி ஜாபர் சேட் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட்
தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட்

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் இன்று (நவம்பர் 14) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிவராஜன் ஆகியோர் விபத்துக்குள்ளான கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டிருந்த அவர்களது உடல்களுக்கு, தீயணைப்புத் துறை டிஜிபி ஜாபர் சேட் நேரில் அஞ்சலி செலுத்தினார். பிறகு அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், மீட்புப் பணியின்போது, காயமடைந்த தீயணைப்பு வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.

பிறகு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விபத்திற்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மதுரை மாநகர காவல் துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் சங்கு மணி ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாபர், " தீ விபத்து ஏற்பட்டது பழமையான கட்டடம் என்பதால் தீயை அணைக்கும் மீட்புப் பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர்.

தீயணைப்புத்துறை டிஜிபி ஜாபர் சேட் ஆய்வு

உயிரிழந்த வீரர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீப்பரவலைத் தடுக்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டு இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ”அண்மையில் தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது” - உயிரிழந்த தீயணைப்பு வீரரின் குடும்பத்தார் சோகம்!

Last Updated : Nov 14, 2020, 6:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details