தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவின் பாலில் துர்நாற்றம்: பொதுமேலாளர் விளக்கம் - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: ஆவின் பால் பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாக எழுந்துள்ள புகாரையடுத்து உரிய தரக்கட்டுப்பாடு செய்து பால் விநியோகம் தடையின்றி நடைபெறுவதாக ஆவின் பொதுமேலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆவின் பால்
ஆவின் பால்

By

Published : Sep 22, 2020, 3:26 PM IST

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் பீபிகுளம், விராட்டிபத்து, எல்லிஸ் நகர், மேல அனுப்பானடி, டி ஆர் ஓ காலனி, கூடல்புதூர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போனது போன்று இருந்ததோடு அந்த பால் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஆவின் பாலில் தொடர்ந்து ஒருவார காலமாக துர்நாற்றம் வீசி வருவது தொடர்பாகவும் பால் கெட்டுப் போனது போன்று இருந்ததாலும் நுகர்வோர்கள் அதனை திருப்பிக் கொடுத்து வேறு பால் மாற்றி தருமாறு கேட்பதால் பால் முகவர்களும் சில்லறை வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஆவின் பால் விற்பனை மூலம் பால் முகவர்களுக்கு சொற்ப அளவிலேயே வருமானம் கிடைப்பதால் நுகர்வோர் தரப்பிலிருந்து தொடர்ந்து ஒருவார காலமாக தொடர்ச்சியாக வந்த புகாரைத் தொடர்ந்து மதுரை மாவட்ட உயர் அலுவலர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டும் ஆவின் அலுவலர்கள் வாட்ஸ்அப் மூலமும் அவர்களின் கவனத்திற்கு மேற்கண்ட பிரச்னையைக் கொண்டு சென்றுள்ளனர்.

பால் முகவர்கள் கூறிய புகாரை கேட்டுக்கொண்டு சரி செய்வதாக உறுதி அளித்து அலுவலர்கள் அதனை சரி செய்யாமல் இன்றுவரை மதுரைமாவட்ட ஆவின் பாலில் துர்நாற்றம் வீசுகின்ற அதே நிலையே தற்போது வரை நீடிக்கிறது.

ஏற்கனவே மதுரை மாவட்ட பால் திட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 8 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில் மதுரை மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு மொத்த பால் குளிர்விப்பான் நிலையங்களில் பல கோடி ரூபாய் வரை மோசடிகள் அரங்கேறி வருகின்றன.

அதில் இதுவரை ஒரே ஒரு மொத்த பால் குளிரூட்டும் நிலையத்தில் மட்டும் 62 லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடிகளாலும் முறைகேடுகளாலும் சிக்கி சீரழிந்து வரும் மதுரை மாவட்ட ஆவின் நிர்வாக சீர்கேட்டால் தற்போது தரமற்ற பாலினை விநியோகம் செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

மேலும் தாய்ப்பாலுக்கு நிகரான பால் ஆவின் பால் என தமிழ்நாடு அரசு விளம்பரம் செய்துவரும் நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக ஆவின் பாலே துர்நாற்றம் வீசுகின்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு அதன் தரம் தனியார் பால் நிறுவனங்கள் மத்தியில் சந்தி சிரிக்க தொடங்கியுள்ளது.


ஆவின் பால் கொள்முதல் நிலையங்களிலும் அதன் கூட்டுறவு சங்கங்களிலும் ஆவின் நிறுவனத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐஏஎஸ் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதலமைச்சர் உடனடியாக விழித்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆவின் பொதுமேலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் 19ஆம் தேதி வழக்கம் போல் மதுரை மாவட்டத்தில் பால் விநியோகம் செய்யப்பட்டது.

நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் பாலில் ஒரு வித வாசனை வருவதாக ஆவின் பால் விற்பனை முகவர்களிடமிருந்து புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பால் விநியோகம் பாதிக்காத வண்ணம் மாற்று பால் பைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

இது தொடர்பாக உரிய தரக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பால் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details