மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில்," இந்தியாவில் பல கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலும் தனக்கே உரிய சிறப்பைக் கொண்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன.
இந்தக் கோயில்களில் இருக்கக்கூடிய குளங்களை முறையாகப் பராமரிக்கவும், அவற்றைப் புதுப்பித்து மழைநீரைச் சேமிக்கும் வகையில் மறுகட்டமைப்புச் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு குப்பை, சாக்கடைக் கழிவுகள் கோயில் குளத்தில் சேராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களிடம் மனு அளித்த நிலையில், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் குளங்களிலும் குப்பை, சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்கவும், மீறுவோர் மீது அதிக அபராதம் விதிப்பது, தண்டனை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், கோயில் குளங்களை முறையாகத் தூர்வாரி பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
கோயில் நிலம் ஆக்கிரமிப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரத்து 586 கோயில்களில் ஆயிரத்து 291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன.
ஆயிரத்து 68 குளங்களில் நீர் நிரம்பிய போதிலும் படிக்கட்டுகள் போன்றவை புனரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. இவற்றில் 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுவிட்டன. 37 குளங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, கோயில் குளங்களைச் சுத்தப்படுத்தி பராமரிப்பது, தூர்வாருவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த வழிகாட்டல்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
அவற்றை நடைமுறைப்படுத்தி அறிக்கையைத் தாக்கல்செய்ய இரண்டு மாத கால அவகாசம் கோரப்பட்டது" எனத் தெரிவித்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழிகாட்டல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது தொடர்பாக, நிலை அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கினை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க:வெடிகுண்டு வழக்கு: விடுதலைப் புலிகள் உள்பட எழுவர் விடுதலை