தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்தப் பொறியாளர் சங்க மாநில துணைத் தலைவர் விஜயகுமார் தரப்பில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புப் பணிக்கு மத்திய காவல் துறை படையை நியமனம் செய்யக் கோரியும், அணைப் பகுதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான 132 முதல் 152 அடி வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டுமெனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லஜபதிராய், வழக்கினைத் தாக்கல் செய்தவர் இறந்துவிட்ட காரணத்தால், தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர் சங்க மாநில முன்னாள் தலைவர் ரெங்கனை இந்த வழக்கில் சேர்க்கக் கோரினார். அதனை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான ஆக்கிரமிப்பு வழக்கு; கேரள அரசுக்கு நோட்டீஸ்!
மதுரை: முல்லைப் பெரியாறு அணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் கேரள அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசுத்தரப்பில் இதே போன்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அது கேரள ஆக்கிரமிப்பு தொடர்பானது. இது தமிழ்நாடு அரசின் வரம்பிற்குட்பட்ட 152 அடி வரையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்கு. ஆக்கிரமிப்புகள் இருப்பது மத்திய அரசின் ரகசிய அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து கேரள அரசிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.