மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடி தொழிலாளர்கள் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அழைத்து வரப்பட்டனர். தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகளின் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையிலும், இவர்களை அழைத்து வந்த ஏஜென்டுகள் தொடர்ந்து பணி செய்ய வற்புறுத்தியுள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளுக்கு இந்தத் தகவல் சென்று சேர்ந்த நிலையில், கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அவர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஃபிலோமின்ராஜால் மீட்கப்பட்டு மதுரையில் உள்ள ஐடியாஸ் தொண்டு நிறுவனத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
இந்தப் பணியாளர்களுக்கு அவர்களது முதலாளி தர வேண்டிய சம்பள நிலுவைத் தொகை அனைத்தும் பெறப்பட்டதுடன், கொத்தடிமைகளாக பணி செய்ய வலியுறுத்திய காரணத்திற்காக அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்ல அரசு உதவிட வேண்டும் என கோரியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞர் ஃபிலோமின் ராஜ் ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் சத்தீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடி ஆதிவாசி மற்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்காக மதுரைக்கு அழைத்துவரப்பட்ட 14 வடமாநில தொழிலாளர்களை தேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஆணையத்தின் உதவியோடு நாங்கள் மீட்கப்பட்டு, உரிய உணவு உடை இருப்பிட வசதிகளை தற்போது செய்து கொடுத்துள்ளோம். அதுமட்டுமன்றி கொத்தடிமை போன்று பணியாற்றிய தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை எட்டு மாதங்களிலிருந்து பத்து மாதங்கள்வரையுள்ள ஊதியத்தை முதலாளிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.
அநேகமாக ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே இது முதல் முறையாகும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்டெடுப்பதில் மக்கள் கண்காணிப்பகத்துடன் இணைந்து வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போதைய சூழலில் ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இந்தத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனடிப்படையில், 14 தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களுக்கு திரும்ப மிகுந்த ஆவலுடன் உள்ளனர். ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியரும் தமிழ்நாடு முதலமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை தாண்டிய கரோனா தொற்று பாதிப்பு!