மதுரை மாவட்டம் மணப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவரின் மனைவி பொம்மி ஓராண்டுக்கு முன்பு அங்கன்வாடி பணிக்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் சமையல் உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணை வந்தது.
இதற்கிடையே பணிக்கு விண்ணப்பித்த சில மாதங்களிலேயே பொம்மி இறந்துவிட்டார். பொம்மிக்கு ஏழாண்டுகளுக்குமுன்பே அவரது கணவரும் இறந்தது குறிப்பிடத்தக்கது.
பொம்மியின் குழந்தைகள் விசாலினி, குணால் ஆகிய இருவரையும் சித்தி பாண்டி மீனாள் தனது பொறுப்பில் வளர்த்து வருகின்றார். இறந்துபோன தங்கள் தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையை தங்களது சித்திக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டு குழந்தைகளும் மனு அளித்தனர்
இதுகுறித்து மாணவி விசாலினி கூறுகையில், “தற்போது எங்களது சித்தியின் பராமரிப்பில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். மிகக் கஷ்டமான நிலையிலும், அவர்கள் எங்களைப் படிக்க வைத்து வருகிறார்கள். ஆகையால் மதுரை மாவட்ட ஆட்சியர் எங்களது தாயாருக்கு வந்த சத்துணவு உதவியாளர் வேலையைச் சித்திக்கு வழங்கினால், ஆதரவற்ற எங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்” என்று கூறினார்.