தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை' - Gandhiji fasted half dress

காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் கிராமிய மற்றும் கைவினைப் பொருட்களை ஊக்குவிக்கும் விதமாக அகிம்சை சந்தை இன்று தொடங்கியுள்ளது.

காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை'
காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை'

By

Published : Sep 22, 2022, 2:24 PM IST

மதுரை:ஜே.சி.குமரப்பாவின் காந்தியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்துடன் இணைந்து அகிம்சை பொருளாதாரக் கூட்டமைப்பு இன்று (செப் 22) தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி வரை ‘அகிம்சை சந்தை’ நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து உற்பத்தியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதுகுறித்து அகிம்சை சந்தையின் ஒருங்கிணைப்பாளரும் காந்தியவாதியுமான பி.வி.ராஜகோபால் கூறுகையில், “தற்போது உலகம் முழுவதும் பல்வேறு வகையான அகிம்சையற்ற பொருட்களே விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

அந்த வகையில் நமது அடுத்த தலைமுறைக்கு அகிம்சை சந்தை முறையை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்பது அகிம்சை சந்தையை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதே இந்நிகழ்வின் நோக்கம்.

தென்னிந்திய மாநிலங்களில் உள்ள 150 உற்பத்தியாளர் குழுக்கள் அகிம்சை சந்தையில் பங்கேற்கின்றன. இவர்கள் அனைவரும் மிகச்சிறிய அளவில் தங்கள் கிராமம் சார்ந்து இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆவர். உள்ளூர் அளவில் என்ன தேவையோ, அதன் பொருட்டு இவர்கள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். Non Violent Economy குறித்து அறிந்து கொள்ள அவர்களுக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு குமரப்பாவின் நினைவிடம் அமைந்துள்ள மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி அருகேயுள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரை புறப்பட்டு, சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று காந்தியின் பொருளாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

காந்தியடிகள் அரையாடை விரதம் பூண்ட மதுரையில் தொடங்கிய ‘அகிம்சை சந்தை'

வினோபாஜி கூறியதைப்போன்று, அகிம்சைப் பொருளாதாரத்தை கிராம மக்களுக்கு உணர்த்துவதுடன் தாங்கள் வசிக்குமிடங்களிலேயே தங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும் அறிவுறுத்துவதும் இதன் நோக்கங்களுள் ஒன்றாகும்.

குறிப்பாக இந்த ஐந்து நாட்களும் பல்வேறு வகையான கல்வியாளர்கள், அறிஞர்களைக் கொண்ட அமர்வுகள், கருத்தரங்குகளும் நடைபெறவுள்ளன. அதன் மூலம் அகிம்சை சந்தையின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கலைநிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. இதே செப்டம்பர் 22 ஆம் நாள்தான் காந்தியடிகள் மதுரையில் அரையாடை விரதம் பூண்டார். ஆகையால் அந்த நாளையே முக்கியமாகக் கொண்டு அகிம்சை சந்தை நிகழ்வினை தொடங்குகிறோம்' என்றார்.

இதனையடுத்து பேசிய அகிம்சை பொருளாதார கூட்டமைப்பின் ஆலோசகர் ஜில் கார் ஹாரிஸ், “மிகவும் அமைதி நிறைந்த மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெறும் அகிம்சை சந்தை நிகழ்வினை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என அன்புடன் அழைக்கிறோம்.

இந்த ஐந்து நாட்களும் அகிம்சை பொருளாதாரம் குறித்த பல்வேறு பட்ட பார்வைகளை, கோணங்களை அனைவரும் அறிகின்ற வாய்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தித் தந்துள்ளது. ஆகையால் அனைவரும் வருகை தர வேண்டும்' என்றார்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான நடராஜன் கூறுகையில், 'மகாத்மா காந்தியடிகள் பொருளாதார விடுதலை குறித்து பல்வேறு சமயங்களில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். காந்தியடிகளின் நோக்கத்தையே ஜே.சி.குமரப்பா, தான் உருவாக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் வழியே பிரதிபலித்தார்.

உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடித் தொடர்பு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் காந்தியப் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. உடலுழைப்புச் செய்கின்றவர்களுக்குத்தான் லாபம் போய்ச் சேர வேண்டும் என்பதை காந்தியப் பொருளாதாரமே தொடர்ந்து வலியுறுத்துகிறது.

நீடித்த வளர்ச்சி, வளங்குன்றா வளர்ச்சி என்பது குறித்தெல்லாம் நாம் பேசுகிறோம். இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் அனைத்துமே சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்க வேண்டும் என்பதுதான் அகிம்சை பொருளாதாரத்தின் உயிர்நாடி. இந்த ஐந்து நாள் நிகழ்விலும் மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.

அதேபோன்று உடல் ஆரோக்கியத்திற்கு மாறாக பல்வேறு பொருட்களை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுகுறித்த விழிப்புணர்வும் அகிம்சை சந்தையின் முக்கிய நோக்கமாகும்' என தெரிவித்தார்.

காந்தி அரையாடை விரதம் பூண்ட மதுரையில் குறிப்பாக அதே நாளில் தொடங்கப்பட்டுள்ள இந்த அகிம்சை சந்தை, தேசிய அளவில் முதல் முயற்சியாகும். மண்ணையும் மக்களையும் பாதிக்காத வகையில் நிகழும் வளர்ச்சிதான் முழுமையான வளர்ச்சியாகக் கருத முடியும் என்பதற்கு அகிம்சை சந்தை முக்கிய அளவுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படிங்க:சூடுபிடிக்கும் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் - சோனியா காந்தியை சந்தித்த கெலாட்!

ABOUT THE AUTHOR

...view details