மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக 79 திட்டப்பணிகளை நிறைவேற்றியுள்ளார். அதன்படி மதுரையில் 80ஆவது வார்டு, முத்து மீனாட்சி மருத்துவமனை வார்டு 13, புட்டுத்தோப்பு வார்டு 9 அருள்தாஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 26. 50 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட டாப்ளர் ஸ்கேன் கருவிகள் அளித்துள்ளார்.
இதன்மூலம் கர்ப்பிணி பெண்கள் பெருமளவு பயன்படும் வகையில் வயிற்றில் உள்ள குழந்தையின் உயரம், எடை ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும் . குழந்தை உருவாக்கத்தின் நிலைகளைத் தெரிந்து கொள்ளலாம். லீனியர் கருவிகள் மூலமாக மார்பகம் தைராய்டு ரத்தநாளம் குறித்த பிரச்னைகளை அறிந்து கொள்ள முடியும். மதுரை மாநகராட்சியில் முதல்முறையாக இந்தத் திட்டப் பணிகள் மத்திய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.