மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை வருவாய்த் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
அவ்விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில், 'பொதுவாக இந்த தேசத்திற்காக உழைத்தவர்கள் பற்றி கருத்துக் கூறுவது என்பது முழுமையாக அறிந்து கூற வேண்டும். கொள்கையில் மாற்றுக்கருத்து இருக்குமானால் மக்கள் முகம் சுளிக்காத வண்ணம் நடைமுறையையும் கற்றுத் தெரிந்திருக்க வேண்டும்.
சமூக நீதியின் காவலனாகத் திகழ்ந்த பெரியாரை பற்றி ரஜினி கூறியது, தமிழ்நாடு மக்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் கிடையாது. அவருடைய தர்பார் படத்தை அனைவரும் பார்த்துள்ளோம். அதேபோன்று இன்றைக்குத் தமிழ்நாட்டிலும் தர்பார் நடத்தி வருகிறார். மக்கள் என்ன தீர்ப்பு தரப் போகிறார்கள் என்பதை மக்களோடு சேர்ந்து நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
'எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது' தொடர்ந்து பேசிய அமைச்சர், 'எதன் அடிப்படையில் பெரியார் குறித்து ரஜினி கருத்து தெரிவித்துள்ளார் என்ற ஆய்வு தேவையற்றது. பெரியார் குறித்து ரஜினி கருத்து கூறாமல் தவிர்த்திருக்கலாம். மன்னிப்பு கேட்டிருக்கலாம் என்ற விவாதங்கள் பல தரப்பிலிருந்து எழுந்து வந்தாலும், எத்தனை ரஜினிகள் வந்தாலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'பெரியார் வழியில் அதிமுக பயணிக்கும்' - அமைச்சர் செங்கோட்டையன்!