குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியில் உள்ள லின்டி ஸ்டூவர்டு என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.
அதில், “அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி நாகர்கோவில் உள்ளது. இந்தக் கல்லூரியில் தற்போது நான் மின்னணு மற்றும் தகவல்தொடர்பு பொறியியல் (ECE) துறையில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறேன். 2009ஆம் ஆண்டு முறைப்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் உரிய விதிமுறைகளை ஒத்து தகுதிகளின் அடிப்படையில் உதவி பேராசிரியர் பணி நியமனம் பெற்றேன். அதன் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணி உறுதிசெய்யப்பட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக அந்தக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறேன்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், பணியாளர்கள் உபரியாக உள்ளவர்கள், முறைகேடான முறையில் பணியில் சேர்ந்தவர்களை ஆராய்வதற்காக 2017ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு தற்போது ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 735 பேராசிரியர்கள் உள்ளிட்டோரை பணிநீக்கம் செய்யலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. இதில் என்னுடைய பெயரும் உள்ளது.
நாகர்கோவில் உதவி பேராசிரியருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது - நீதிமன்றம் உத்தரவு! விதிமுறைகளின் அடிப்படையில் முறையாகத் தேர்வுசெய்யப்பட்டு 10 ஆண்டுகள் நான் பணியாற்றியுள்ளேன். இந்த நிலையில் எனது பணியே இப்போது கேள்விக்குறியாக உள்ளது.
நான் உரிய கல்வித் தகுதியின் அடிப்படையில் முறைப்படிதான் பணியில் சேர்ந்துள்ளேன். எனவே அண்ணா பல்கலைக்கழக குழுவின் பரிந்துரை அடிப்படையில், நாகர்கோவிலில் உள்ள அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் என்னை பணியிலிருந்து நீக்க தடைவிதிக்க வேண்டும்.
இந்த நிலையில் இந்தக் குழு அறிக்கையின் அடிப்படையில், என்னை உதவி பேராசிரியர் பணியிலிருந்து நீக்கம்செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதி நிஷா பானு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான உதவிப் பேராசிரியர் லின்டி ஸ்டூவர்டின் பணிக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார். மேலும் இது குறித்து முழுமையான தகவலை தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க :அரியலூர், கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு