மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் இன்று ஆய்வு மேற்கொண்ட, ஆட்சியர் வினய், கொரோனா வைரஸ் தனிப்பிரிவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அப்பிரிவில் தற்போது வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் விபரங்களைக் கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'வழக்கமாய் மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இன்று நடைபெற்றது. குறிப்பாக தற்போது தமிழ்நாடு சுகாதாரத் துறையின் உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிப் பிரிவையும் பார்வையிட்டேன்.
சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், தேவையான அனைத்து வசதிகளோடு தனிப்பிரிவு மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை.
நேற்று அனுமதிக்கப்பட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த அனில் ராஜ், இவர் மதுரையில் ஜிஎஸ்டி கலால் மற்றும் சுங்க வரித் துறையில் பணியாற்றுகிறார். மேலும், இவர் அடிக்கடி இத்தாலி நாட்டிற்குச் சென்று வருபவர் என்பதால், தானாக முன்வந்து கொரோனா தனிப்பிரிவில் சேர்ந்து கொண்டார். தற்போது அவர் குறித்த பரிசோதனை விவரங்கள் தேனி மருத்துவமனைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது' என்றார்.
மதுரை ஆட்சியர் வினய் பேசிய காணொலி மேலும் அவர் 'தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் மதுரையிலும் அதற்குரிய வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அது நிறைவு பெற்றுவிட்டால் மதுரையிலேயே கொரோனா குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
இதையும் படிங்க:கொரோனா எதிரொலி: விஐடி, சிஎம்சி மருத்துவமனை நோயாளிகள் சொந்த ஊர் செல்ல தடை