தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் மதுரை மத்திய சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவியை அவரது வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் நேரில் சந்தித்து 30 நிமிடம் பேசியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் கூறியதாவது,
நிர்மலா தேவி 10 மாதங்களாக சிறையில் உள்ளதால் உடல்நலக் குறைவு பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 5 மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின்போது சீருடை அணியாத காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் நிர்மலா தேவியை மிரட்டியுள்ளார்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிர்மலா தேவியை விடுதலை செய்யப்படுவார். அதுவரை ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என்றும் பெண் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். நிர்மலா தேவி வாய் திறக்கமால் இருந்தால் விடுதலை செய்யப்படுவார் என்றும் பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நிர்மலா தேவி இத்தகவலை என்னிடம் கூறியதால், இந்த விவகாரத்தில் யார் யார் தலையீடு உள்ளது என்று கூற முடியவில்லை. நிர்மலா தேவி வெளியில் வரக்கூடாது என்று அரசு மற்றும் காவல்துறை செயல்பட்டு வருகிறது. இவரது வழக்கில் உள்ள ஆதாரம் மற்றும் ஆவணங்களை அழிக்க அரசு முயற்சி செய்கிறது" என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.