மதுரை:கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19ஆம் தேதி ஓடும் ஆட்டோவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோ ஓட்டுநரும் மற்றும் குக்கர் குண்டுடன் பயணித்த பயங்கரவாதி ஷாரிக்கும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த ஷாரிக் (22) கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மைசூரில் இருக்கும் ஷாரிக்கின் வீடு மற்றும் அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு ஒரு டைரி சிக்கியது. அதில் பயங்கரவாதி ஷாரிக் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், சேலம், மதுரை, நாகர்கோவில் ஆகிய நான்கு நகரங்களுக்கு வந்து சென்ற விவரம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அதனடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் மதுரையில் தங்கியதாக சந்தேகத்திற்குரிய பகுதிகளான மதுரை டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் ஷாரிக்கின் நடமாட்டம் இருந்திருக்க கூடும் என்ற அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையினர் விசாரணை நடத்தினர்.
மதுரைக்கு ஷாரிக் வந்தபோது எங்கெல்லாம் சென்றார்? அவரை யாரெல்லாம் சந்தித்து பேசினார்கள்? தனி அறையில் ரகசிய ஆலோசனை நடத்தினார்களா? அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பாக தங்கும் விடுதிகளில் உள்ள வருகைப் பதிவேடு சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.