புத்தாண்டை முன்னிட்டுகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ராஜகணபதி நகரிலுள்ள ஸ்ரீராஜகணபதி வரசித்தி ஆஞ்சநேயர் கோயிலில் பாரம்பரிய முறைப்படி நிலக்கடலை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் ஆஞ்சநயேர் சுவாமி மீது நிலக்கடலையை வீசி வழிபாடு செய்தனர். இவ்வழிபாடு 62 ஆண்டுகளாக நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல புத்தாண்டில் வழிபாடு செய்ய மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து மீனாட்சி அம்மனை தரிசித்தனர். தரிசனத்தில் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல், மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து புத்தாண்டை வெகுவிமர்சையாக கொண்டாடினர். குணா குகை, தூண் பாறை, ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பல்வேறு மாவட்டங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் அதேபோல், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் குபேர பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். புதுச்சேரியிலுள்ள பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். இதில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
கள்ளக்குறிச்சியில் புத்தாண்டை முன்னிட்டு சாலைப் போக்குவரத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள், மாடூர் சுங்கச்சாவடி சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டனர். புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக பெரம்பலூரிலுள்ள தனியார் பேக்கரி சார்பில் பிரமாண்ட கேக் திருவிழா புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில், வாடிக்கையாளர்களின் புகைப்படங்கள் வரையப்பட்ட கேக், வானவில் வண்ணம் கொண்ட ரெயின்போ கேக் உள்ளிட்டவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க:1,100 மில்லி தங்கத்தில் புத்தாண்டு கேக் - நகைத்தொழிலாளி சாதனை!