புதுக்கோட்டை: ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "புதுக்கோட்டை மாவட்ட வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. பாகம் எண் 102-ல் 389 முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்களும், பாகம் எண் 99-ல் 36 முகவரி மாற்றம் செய்துள்ளவர்களின் பெயர்களும், பாகம் எண் 103-ல் 36 முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 106 பேரின் பெயர்கள் இருமுறை இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு ஏறத்தாழ 700 வாக்காளர்களின் பெயர்கள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளன. தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்வது அவசியம். ஆகவே புதுக்கோட்டை நகராட்சியின் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்து, புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:’டிஜிட்டல் ஊடக கண்காணிப்பு புதிய விதிக்கு இடைக்கால தடை’ - உயர் நீதிமன்றம் உத்தரவு