தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்வில் காப்பி அடித்தலைக் கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம்! - காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர்

மதுரை: தேர்வில் காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைத் தடுப்பதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பேராசிரியரின் புதிய தொழில்நுட்பம்
பேராசிரியரின் புதிய தொழில்நுட்பம்

By

Published : Oct 1, 2020, 10:15 PM IST

தேர்வுகளில் காப்பி அடிப்பதிலும் ஆள்மாறாட்டம் செய்வதிலும் பல்வேறு யுக்திகளைக் கையாண்டு மோசடிகள் நடைபெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் அதனைத் தடுப்பதற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் மேசக் பொன்ராஜ் 'மின்னணு சங்கிலி' என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.

'மின்னணு சங்கிலி' முறையில் தேர்வுகள் நடத்தப்படும்போது தேர்வர்கள் யாரிடமும் பேச முடியாது. மீறி பேசினால் இணையதளம் மூலம் கட்டுப்பாட்டு கணினிக்குத் தெரிந்துவிடும். இந்தத் தேர்வு முறையில் தேர்வர்கள் வலது கையில் செல்லிடப்பேசியை வைத்திருக்க வேண்டும். இடது கையில் எஸ்.எஸ்.சி. ஸ்மார்ட் அண்ட் செக்யூர் கார்டு என்ற மின்னணு கருவியை வைத்திருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும்போது ஒவ்வொரு கேள்வியும் ஒரு நிமிடம் மட்டுமே செல்லிடப்பேசியில் காண்பிக்கப்படும். தேர்வின்போது தேர்வர்களின் அருகில் உள்ள நண்பர்கள், பெற்றோர் அருகில் சென்று வினாவை படிப்பது அல்லது ஏதாவது உதவிகள் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் கண்காணிப்பு கேமரா படம் எடுத்து தேர்வு கட்டுப்பாட்டு கணினிக்கு அனுப்பிவிடும்.

இரண்டு கைகளுக்கும் இடையே சுமார் ஒரு அங்குலத்திற்கு குறைவான தூரமே இருப்பதால் இந்தத் தொழில்நுட்பம் 'மின்னணு சங்கிலி' என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் மாணவர்கள் புத்தகங்களைப் புரட்டுவதற்கு வாய்ப்பில்லை.

ஒவ்வொரு வினைக்கும் அவரது எஸ்.எஸ்.சி. உபகரணம் மூலம் கைரேகையையும் காணொலி மூலமாகப் பதிவுசெய்யப்படும். இதனால் தேர்வில் ஆள்மாறாட்டம் போன்ற செயல்கள் ஒழிக்கப்படும். கணினி மூலம் நடத்தப்படும் தேர்வுகளை ஒப்பிடுகையில், செல்லிடப்பேசி, எஸ்.எஸ்.சி. முறையில் நடத்தப்படும் தேர்வுகள் செலவு மிகக்குறைவு.

இணைய பயன்பாட்டின்போது இணைப்பு கிடைக்காவிட்டால் தேர்வர்கள் செல்லிடப்பேசியை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று இணைப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு வைத்து தேர்வில் பங்கேற்கலாம்.

இது குறித்து பேராசிரியர் மேசக் பொன்ராஜ் கூறுகையில், "காமராசர் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள்களுக்கு ரூபாய் 50 லட்சத்தைச் செலவழிக்கிறது.

'மின்னணு சங்கிலி' தொழில்நுட்பம் மூலமாக இந்தச் செலவினங்களைத் தவிர்க்க முடியும். மேலும் தாள்களுக்காக மரங்களை வெட்டுவதிலிருந்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கலாம். இந்தத் தொழில்நுட்பத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன், காந்தி ஜெயந்தியையொட்டி அக்டோபர் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

மேலும் இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து காமராசர் பல்கலைக்கழகம் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. பயிற்சியில் பங்குபெற விரும்பும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் meshachponraj.dcs@mkuniversity.org என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம்" என்று கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details