மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக கடந்த கடந்த ஜூலை 9ஆம் தேதி பேராசிரியை ஆர்.சுதா பொறுப்பு ஏற்றார். இந்நிலையில் அவர் 58 வயது நிறைவடைந்ததை ஒட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து துணைவேந்தர் மு.கிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழகத்தின் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் பொறுப்பு வகித்த ஆர்.சுதாவின் ராஜினாமா ஏற்கப்பட்டது. உயிரி தொழில்நுட்பத்துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் எம்.சங்கர் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமனம் செய்யப்பட்டார்.
அதேபோன்று காமராஜர் பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர், ரூசோ திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரும் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, புதிய நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளராக சமூகவியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், மக்கள் தொடர்பு அலுவலராக உதவிப் பதிவாளர் பாண்டியராஜன், ரூசோ திட்ட ஒருங்கிணைப்பாளராக உயிரியியல் புல பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோர் சிண்டிகேட்டால் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பதிவாளரை நியமனம் செய்யும் நடைமுறைப் பணிகளை விரைவுபடுத்துல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்வது குறித்து சிண்டிகேட் உறுப்பினர் தீனதயாளன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அதற்குரிய நடைமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட முடிவுகள் சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
மேலும் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டன. காமராஜர் பல்கலைக் கழகத்தின் முதல் பெண் பதிவாளர் பேராசிரியை சுதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காப்பகத்திலிருந்த குழந்தைகள் சென்னை சென்ற விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!