தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: விருதுநகர் மாவட்ட எல்லையில் கிபி 1217ஆம் ஆண்டைச் சேர்ந்த பாண்டியர் கால பாடல் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு, new inscription found near by madurai
மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு, new inscription found near by madurai

By

Published : Feb 11, 2020, 9:16 PM IST

இது குறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் முனைவர் மருது பாண்டியன் கூறுகையில், ”மதுரைக்கு 25 கி.மீ. தொலைவில் விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் என்னும் சிற்றூரில் பிற்காலப் பாண்டியர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் முனைவர் திருமால் ராஜா, அவரது குழுவினர் மணிகண்டன், நாகராஜன், ஆதி தேவன் ஆகியோர் வழங்கிய தகவலின்படி மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் என்ற முறையில் நானும் என்னுடன் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் மூத்த ஆய்வாளர் உதயகுமாரும் இக்கல்வெட்டை வாசித்தோம்.

பலவகையிலும் இந்தக் கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்த கல்வெட்டு அழகிய தமிழ் பாடல் வடிவில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டு 'ஸ்ரீ அன்ன மென்னு நடை' எனும் தொடருடன் தொடங்குகிறது. இது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள முதலாம் மாறவர்மன் கல்வெட்டில் காணப்படும் தொடரை ஒத்துள்ளது.

இக்கல்வெட்டில் சக்ர ஆண்டு 1139 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் கிறிஸ்தவ ஆண்டு 1217 ஆகும். எனவே இக்கல்வெட்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இரண்டாம் ஆட்சி ஆண்டைச் சேர்ந்தது (கிபி 1216-1238) எனக் கருதப்படுகிறது. ஆனால் இக்கல்வெட்டு குலசேகருக்கு 28ஆவது ஆட்சியாண்டு எனக் குறிப்பிடுகிறது.

மதுரை அருகே பாண்டியர் கால பாடல் கல்வெட்டு கண்டுபிடிப்பு

இந்த குலசேகர பாண்டியன் முதலாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1216) ஆவான். இவனே மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மூத்த சகோதரன். வரலாற்று ஆசிரியர்கள் இவனது ஆட்சிக் காலத்தை கி.பி. 1216இல் முடிந்தது என்றும் 1216இல் சுந்தர பாண்டியன் ஆட்சி தொடங்கியது என்றும் கருதுகின்றனர்.

ஆனால் இக்கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சி 28 ஆண்டுகள் நீடித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அது இக்கல்வெட்டின் கூடுதல் சிறப்பம்சமாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. எனவே குலசேகரனும், சுந்தர பாண்டியனும் உடன் ஆட்சியாளர்களாக கி.பி.1216 மற்றும் கி.பி.1217ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனர் என்பதை சிவன் கோயில் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டு கல்குறிச்சி ஊரில் உள்ள சிவன் கோயிலுக்கு அவ்வூரில் குளத்தி வாய்க்கால் எனும் வயலின் செந்நெல் விளையும் நிலத்தை முத்தரையர் கொடையாக அளித்தார் எனும் செய்தியை குறிப்பிடுகிறது. கல்குறிச்சி எனும் ஊர் இன்றும் மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இக்கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சேர்ந்த கல்தச்சர் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்க தச்சன் ஆவான்.

கல்வெட்டைப் படித்து பொருள் அறிய உதவியவர் பாண்டிய நாட்டு வரலாற்று மைய செயலாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம்' என்றார்.

மேலும் அவர் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சி ஆண்டு குறித்தும் பாடல் வடிவில் அமைந்த ஒன்றாகவும் இந்த கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது எனவும் கூறினார்.

இதையும் படிங்க:'மாஸ்டர்' விஜய்யின் 'ஒரு குட்டி கதை' - சிங்கிள் ட்ராக் மாஸ் அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details