மதுரை: நியோமேக்ஸ் (Neomax) நிறுவனத்தைச் சார்ந்த பழனிசாமி, பாலசுப்பிரமணியன், அசோக்மித்தா, சார்லஸ், தியாகராஜன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரையை தலைமையகமாக கொண்டு நியோமேக்ஸ் பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநர்களாக வீரசக்தி, மற்றும் கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன் என பலர் உள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு பாளையங்கோட்டை, கோவில்பட்டி - மதுரை பைபாஸ் மற்றும் திருச்சி - தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன. நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி, ஏக்கர் கணக்கில் நிலத்தை வாங்கி DTCP நகர் மற்றும் நகரமைப்பு இயக்குநரக அனுமதி பெற்று, குறைந்தபட்சம் 1000 மனைகளை உள்ளடக்கி லே-அவுட்டை (Layout) உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு மனைகளை விற்கிறோம்.
மனைகளுக்குள் ஹோட்டல், பெட்ரோல் பங்க், பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவமனையை லே-அவுட்டுக்குள் கட்டுகிறோம். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களிடம் முழு விவரங்களும் தெரிவிக்கப்பட்டு டெபாசிட் பெறப்பட்டு அதற்கான ரசீது கொடுக்கப்படுகிறது.
நிலங்கள் விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர் பெயரில் பதிவு செய்து கொடுயப்படுகிறது. NEOMAX GROUP இதுவரை தென் தமிழகத்தில் 16 லே-அவுட் திட்டங்களில் 9 கோடியே 79 லட்சத்து 89 ஆயிரம் சதுர அடியில் (2,249.565 ஏக்கர்)க்கான அரசு ஒப்புதல் பெற்றுள்ளது. நாங்கள் பதிவு செய்து கொடுக்கப்பட்ட நில விற்பனை பத்திரத்தை ஒரு அளவிற்கு செயல்படுத்தியுள்ளோம். 15,000 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எங்களிடம் 4 கோடியே 12 லட்சத்து 65 ஆயிரத்து 276.35 சதுர அடியில் (DTCP அங்கீகரிக்கப்பட்ட மனைகள்) நிலங்கள் பத்திர பதிவு செய்ய தயாராக உள்ளன. நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, திருவாரூர், ராமநாதபுரம், போடி, பெரியகுளம் பகுதிகளில் சொத்துக்கள் நிலங்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் சிலர் நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்ததாக கூறி மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.