மதுரை:நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்துவரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி, கொடூரமாக சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சிலர், தங்களை போலீசார் தாக்கவில்லை என்றும், கீழே விழுந்து பல் உடைந்ததாகவும் கூறினர். காவல்துறையினர் அச்சுறுத்தியதன் காரணமாகவே பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு கூறுவதாக பேசப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சார் ஆட்சியர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த சம்பவத்தில் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். திருநெல்வேலி எஸ்பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முதல் முதலில் குற்றம்சாட்டிய சூர்யா என்பவர் பிறழ் சாட்சியான நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்தான் தங்களை சித்தரவதை செய்து பல்லை உடைத்ததாக சில இளைஞர்கள் நேற்று(ஏப்.5) மதுரையில் பேட்டியளித்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அம்பாசமுத்திரம் தாலுகா சிவசக்தி நகரை சார்ந்த இளைஞர் அருண்குமார், "யூனிபார்ம் அணியாத இரு போலீசார் பின்னாலிருந்து இறுகப் பிடித்துக் கொண்டு, எனது கால்களை அவர்களது கால்களால் மிதித்துக் கொண்டார்கள். அப்போது ஏஎஸ்பி பல்வீர்சிங் என் முன்னால் வந்து, என்னை வாயைத் திறக்க சொன்னார். நான் திறக்கமாட்டேன் என்று வாயை இறுக்க மூடிக் கொண்டேன். இதனைப் பார்த்த பல்வீர்சிங், அவர் கையில் வைத்திருந்த கல்லால் எனது உதட்டில் ஓங்கி அடித்தார். நான் வலி தாங்க முடியாமல் அம்மா எனக் கத்தினேன். அப்போது வாயைத் திற என்று சொன்னார். நான் பயந்து கொண்டே வாயைத் திறந்தேன். உடனே அவர் தன் கையில் வைத்திருந்த கருங்கல்லை வைத்து பற்களிலும் ஈறுகளிலும் அழுத்தி தேய்த்தார்.
என்னால் வலி தாங்க முடியாமல், வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் அழுதேன். அப்போது எனக்கு உயிர் போகிற அளவிற்கு வலி ஏற்பட்டது. அதன் பின்பு எனது மேல்தாடையிலுள்ள பல்லை ஓங்கி ஓங்கி சுமார் 5 முறை அடித்தார். அப்போது நடுப்பல்லை ஒட்டியுள்ள இடதுபக்க முதல்பல் பாதி உடைந்தது. நான் வலி தாங்க முடியாமல் விடுங்க சார், விடுங்க சார் என்று கத்தினேன். நான் வலி தாங்க முடியாமல் வாயை மூடியபோதெல்லாம் உதட்டில் கல்லால் அடித்தார். இதனால், நான் வாயைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேல்பக்க பல் உடைந்த பின்பு கீழ்த்தாடையிலுள்ள பல்லில் கல்லை வைத்து தட்டி தட்டி உடைத்தார். இதனால் கீழ்பக்கம் உள்ள 3 பற்கள் பாதி உடைந்து கீழே விழுந்தது.