நீட் ஆள்மாறாட்டத்தில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறி தருமபுரி மாவட்டம் பங்கு நத்தம் ஆறுமுகத்தை காவல் துறையினர் கைதுசெய்தனர். இந்நிலையில் இவர் தனக்குப் பிணை வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தருமபுரியில் நான் எல்.ஐ.சி. முகவராகப் பணியில் உள்ளேன். தேனீ சிபிசிஐடி காவல் துறையினர் நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். நான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தரகராகச் செயல்பட்டதாகக் கூறினர்.
இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தவறுதலாக என்னை இந்த வழக்கில் காவல் துறையினர் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் பிணை கோரி தேனி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.