தமிழ்நாடு

tamil nadu

நீட்டில் முறைகேடு செய்த மாணாக்கரின் சான்றிதழ் கோரிக்கை: நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 8, 2020, 6:48 AM IST

மதுரை: நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் இருவர் தங்களின் உண்மைச் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கில், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
madurai highcourt

சென்னையைச் சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை பிணையில் உள்ளார். இந்நிலையில் அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "கடந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியாகச் சேர்த்து விசாரித்தனர். இந்த வழக்கில் பல்வேறு மாணவர்களும், பெற்றோர்களும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி நான் பிணையில் உள்ளேன்.

இந்த வழக்கு விசாரணையின்போது எனது 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்றுச்சான்று, சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து உண்மைச் சான்றிதழ்களையும் காவல் துறையினர் கைப்பற்றிய நிலையில், தற்போது நீதித் துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட பறிமுதல்செய்யப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எனது எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு கல்லூரியில் இணைந்து கலை மற்றும் அறிவியல் படிப்பில் சேர சென்ற நிலையில், உண்மைச் சான்றிதழ்களைக் கேட்கின்றனர். எனவே நீதிமன்றத்தில் இருக்கும் உண்மைச் சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும். இதில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற தயாராக உள்ளேன்" எனக் கூறியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மற்றொரு மாணவரான ரிஷிகாந்தும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் இன்று நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி:

தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மாற்றுச் சான்றிதழ் தேனி மருத்துவக் கல்லூரி வழங்கும்பட்சத்தில் பெற்றுக் கொள்ளலாம், இல்லை என்றால் வழக்கு முடிந்த பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details