தமிழ்நாடு

tamil nadu

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு: மாணவனின் தந்தை சிபிசிஐடி முன் ஆஜராக உத்தரவு!

By

Published : Nov 28, 2019, 4:53 PM IST

மதுரை: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மாணவனின் தந்தை ரவிக்குமார் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

NEET case, HC order to Student's father appear before CBCID
நீட் தேர்வு ஆள் மாறட்ட வழக்கு: மாணவனின் தந்தை சிபிசிஐடி முன் ஆஜராக உத்தரவு!

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த ரவிக்குமார், அவரது மகன் ரிஷிக்காந்த் இருவரும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில்," நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பான வழக்கில் என் மீதும் என் மகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தபோது, அதனை தள்ளுபடி செய்த நீதிபதிகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகுமாறு உத்தரவிட்டனர்.

நான் ரசாயன கம்பெனி ஒன்றின் தலைவராக பொறுப்பிலிருக்கும் நிலையில், எனது மகன் தனியார் மருத்துவ கல்லூரியில் மருத்துவ கல்வி பயில்வதற்காக சேர்ந்தார். இந்நிலையில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து என்னையும் எனது மகனையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாங்கள் இல்லாத நேரத்தில் வீடுகளில் சோதனை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் அதுபோன்ற ஆள்மாறாட்ட முறைகேட்டில் நாங்கள் ஈடுபடவில்லை.

ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்த போது அந்த புகைப்படத்தில் மாறுபாடு இருந்தது இது தொடர்பாக அதிகாரிகளை அணுகிய போது ஹால் டிக்கெட்டில் திருத்தம் செய்வதற்கான காலக்கெடு முடிவடைந்த காரணத்தால் தேர்வினை எழுதுமாறு அறிவுறுத்தினர். ஆனால் தற்போது, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக என் மீதும் எனது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆகவே, இந்த வழக்கில் எனக்கும் எனது மகனுக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்” என அதில் கூறியிருந்தார் ..

இந்த வழக்கு நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவனின் தற்போதைய விரல் ரேகையும்,தேர்வு நாள் அன்று பதிவு செய்யப்பட்டுள்ள விரல் ரேகையும் ஒத்துபோகவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாணவனின் தந்தை ரவிக்குமார் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு நாளை காலை 10:30 க்கு ஆஜராகி உண்மையை தெரிவிக்க வேண்டும், அவ்வாறு தெரிவித்தால் முன்ஜாமீன் குறித்து பரிசீலிக்கப்படும் என உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details